2 ஆயிரத்து 50 நிலத்தடி நீருட்டல் உறைகிணறு
மழைநீர் வீணாகாமல் சேமிக்க 7 நாட்களில் 2 ஆயிரத்து 50 நிலத்தடி நீருட்டல் உறைகிணறுகள் அமைத்து உலக சாதனை படைக்கப்பட்டது.
நிலத்தடி நீருட்டல் உறைகிணறு
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அணைகள், குளங்கள், ஆறுகள், திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை மூலம் பாசனம் செய்யப்படுகிறது. எனவே மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி ஊரக வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு 21 நாட்களில் 605 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதை தொடர்ந்து மழைக்காலத்தில் வீணாக ஓடும் மழைநீரை, பூமிக்குள் சேமிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ஊரக வளர்ச்சி முகமை மூலம் நீரோடைகள், மழைநீர் தேங்கும் இடங்களில் 2 ஆயிரத்து 50 நிலத்தடி நீருட்டல் உறைகிணறுகளை 7 நாட்களில் அமைக்கும் பணி கடந்த 11-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி முடிந்தது. ஒவ்வொரு உறைகிணற்றிலும் 8 மணி நேரத்தில் 1,000 லிட்டர் மழைநீரை சேமிக்கலாம்.
உலக சாதனை
அந்த வகையில் 2 ஆயிரத்து 50 உறைகிணறுகளிலும் ஓராண்டில் 16 கோடி லிட்டர் முதல் 30 கோடி லிட்டர் வரை மழைநீரை சேமிக்க முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தியாகும். இதற்கிடையே 7 நாட்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டதை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் ஆய்வு செய்து உலக சாதனையாக அங்கீகரித்தனர்.
இந்த உலக சாதனைக்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் விசாகனிடம், அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெங்கராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.