பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு


பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் மலையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு கணிசமாக தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவை விட கூடுதலாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு நேற்றுமுன்தினம் தடை விதிக்கப்பட்டது.

அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கனஅடியில் இருந்து நேற்று 2 ஆயிரம் கனஅடியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது.

அப்போது அணையின் நீர்மட்டம் 43.14 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 924 கன அடி தண்ணீர் உள்வரத்தாக இருக்கிறது. மேலும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.79 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 639 கன அடி தண்ணீர் உள்வரத்தாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் பாசன கால்வாயிலும் திறந்து விடப்பட்டிருந்தது.

இதனால் திற்பரப்பு அருவியில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை நாளான நேற்று அருவியில் குளிக்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டதால் திற்பரப்புஅருவியில் குளிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.

மழை அளவு

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

மாம்பழத்துறையாறு- 19.6, சிற்றார் 1- 5, நாகர்கோவில்- 1.6, கன்னிமார்- 7.2, பேச்சிப்பாறை- 3.2, பாலமோர்- 10.2, ஆனைக்கிடங்கு- 17.2 என பதிவாகி இருந்தது.


Next Story