ரூ.2 ஆயிரம் கடனை திரும்ப கொடுக்காததால்நண்பரை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைஈரோடு கோர்ட்டு தீர்ப்பு


ரூ.2 ஆயிரம் கடனை திரும்ப கொடுக்காததால்நண்பரை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Jan 2023 1:00 AM IST (Updated: 4 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு

ஈரோடு

வாங்கிய கடன் தொகை ரூ.2 ஆயிரத்தை திரும்ப கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் நண்பரை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தொழிலாளிகள்

சேலம் திருவாகவுண்டனூர் அம்மாச்சிநகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் லட்சுமணன். இவர் ஈரோட்டில் நடைபாதைகளில் தங்கி இருந்து கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். அப்போது அவருடன் வேலைக்கு வந்த தொழிலாளர்களுடன் நண்பராக பழகி வந்தார். அவ்வாறு அவருடன் நண்பராக பழகியவர் பெருமாள்.

இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதும், அவரது மற்ற விவரங்களும் தெரியவில்லை. லட்சுமணனும், பெருமாளும் வேலைக்கு செல்வது, ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் நடைபாதை பகுதி, கடை ஓரங்களில் படுத்துக்கொள்வது என்று இருந்தனர்.

ரூ.2 ஆயிரம் கடனுக்கு கொலை

இந்தநிலையில் லட்சுமணனிடம் இருந்து பெருமாள் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த தொகையை லட்சுமணன் திரும்ப கேட்டுவந்தார். கடந்த 28-10-2020 அன்று இரவு 9.30 மணி அளவில் 2 பேரும் வேலையை முடித்துக்கொண்டு மணிக்கூண்டு பகுதிக்கு வந்தனர். அப்போது மீண்டும் பெருமாளிடம் பணம் கேட்டு லட்சுமணன் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பெருமாள் ஆத்திரம் அடைந்து லட்சுமணனை தாக்கினார். இந்த தகராறு பெரிதாகி இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அப்போது லட்சுமணன் கையில் வைத்திருந்த, சிமெண்ட் மூட்டைகள் வெட்டும் கத்தியால் பெருமாளின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பெருமாள் தொடர்பான விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த லட்சுமணனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு ஈரோடு 2-ம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஆர்.மாலதி (பொறுப்பு) விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த உத்தரவில் கூறி இருந்தார். தகாத வார்த்தைகள் பேசிய குற்றத்துக்காக ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.சதீஸ்குமார் ஆஜர் ஆனார்.


Next Story