திருப்பத்தூரில் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் படகு மூலம் பொதுமக்கள் மீட்பு
திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
பலத்த மழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இதனால் திருப்பத்தூர் பெரிய ஏரி, அந்தனேரிஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன.
இந்த ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் ஹவுசிங் போர்டு பகுதி கால்வாய் வழியாக ஆதியூர் ஏரிக்கு செல்ல வேண்டும். இவ்வாறு தண்ணீர் கால்வாய் வழியாக நேற்று முன்தினம் மாலை வரை சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
2 நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகளிலிருந்து வெளியேறிய உபரிநீர் வேலன் நகர், அவ்வை நகர், கதிரிமங்கலம், கசிநாயக்கன்பட்டி, திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு 1-வது மற்றும் 2-வது பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளுக்குள் புகுந்தது.
ஹவுசிங்போர்டு பகுதிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதந்தது. தெருக்களில் முழங்கால் அளவுக்கும் அதிகமாக 3 அடிதண்ணீர் தேங்கியது.
இதனால் வீடுகளில் இருக்க முடியாமலும் வெளியேறி வர முடியாமலும் குழந்தைகள், முதியோர்களுடன் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அதிகாரிகள் விரைவு
இதனை தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் தாசில்தார் சிவபிரகாசம், தலைமையில் வருவாய் துறையினர், நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சி, சு.பள்ளிப்பட்டு ஊராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு ஏரி கால்வாய்கள் செல்லும் பகுதிகளில் தூர்வாரப்பட்டும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதனையடுத்து பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு, தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகளுடன் அங்கு வந்து வீடுகளில் தவித்த முதியவர்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு படகுகளில் ஏற்றி அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்பகுதியில் தண்ணீர் சூழப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வர முடியாத உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
சு.பள்ளிப்பட்டு ஊராட்சி கீழ் குறும்பர் தெரு பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியது. சிவாஜி என்பவரது குடிசைவீடு நீரில் மூழ்கி வீட்டிலிருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா முழங்கால் அளவு தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பார்வையிட்டார். அவருடன் நல்லதம்பி எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோரும் சென்று பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள்திருப்பத்தூர் பெரிய ஏரி, சேலம் மெயின் ரோட்டில் உள்ள அந்தனேரி, கதிரிமங்கலம்ஏரி, சின்னகசி நாயக்கன்பட்டி ஏரி, உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி உள்ளது., நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் ஏரிக்கு செல்லும் நீர் ஊருக்குள் திரும்பி விட்டதாக புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரி சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
பொதுமக்கள் மறியல்
நேற்று காலை 8 மணிக்கு பிறகும் வெள்ளநீர் வடியாததால் ஹவுசிங் போர்டு பகுதி-2 பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சைனாம்மாள் சுப்பிரமணி, மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பெயரில் சாலை மறியல் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஏரியிலிருந்து வந்த தண்ணீரில் பாம்புகளும் வீடுகளுக்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் பாம்பை பிடித்து அடித்தனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்புகளை பிடித்து சென்றனர்.