ஓசூரில் சிறுமிக்கு 2 முறை திருமணம்; 2 வாலிபர்கள் கைது-உடந்தையாக இருந்த தாய், அண்ணன் மீதும் வழக்கு


ஓசூரில் சிறுமிக்கு 2 முறை திருமணம்; 2 வாலிபர்கள் கைது-உடந்தையாக இருந்த தாய், அண்ணன் மீதும் வழக்கு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் சிறுமியை திருமணம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், அண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறுமிக்கு திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவிபாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). இவர் பேக்கரி கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அருண்குமாருக்கும், ஓசூரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

அருண்குமார், சிறுமியுடன் ஓசூரில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே சிறுமிக்கும், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள ராஜ கணபதி நகரை சேர்ந்த வாலிபர் நவீன்குமார் (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கைது

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாலிபர் நவீன்குமார் சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீன்குமாரை கைது செய்து, சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், தனக்கு ஏற்கனவே பெற்றோர் சம்மதத்துடன் அருண்குமார் என்பவருடன் திருமணம் நடந்ததாக தெரிவித்தார்.

வழக்கு

இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்த அருண்குமாரையும் கைது செய்தனர். மேலும் சிறுமியின் தாய், அண்ணன் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story