மினி லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


மினி லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மினி லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் மூன்று பேரை தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மினி லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் டிரைவர் உள்பட 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

சோதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த மினிலாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

அப்போது, மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் இசக்கிவேல் என்பவர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் லாரியில் இருந்த மற்றொரு நபரான தூத்துக்குடி நடராஜபுரம் 1-வது தெருவை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரமேஷ் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசி லாரியில் ஏற்றப்பட்டதாவும், அதனை மாவாக அரைப்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி, மினிலாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிரைவர் இசக்கிவேல், பாலமுருகன், அஜித்குமார் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story