2 டன் ரேஷன் அரிசி கடத்தல்


2 டன் ரேஷன் அரிசி கடத்தல்
x

பேராவூரணி அருகே மினிலாரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய மினிலாரி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்


பேராவூரணி அருகே மினிலாரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய மினிலாரி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்குஉத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பேராவூரணி அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் ஏட்டுகள் செல்வராஜ், மணிகண்டன் மற்றும் போலீசார் பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியில் நேற்று பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று வந்தது. அந்த மினிலாரியை போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ரேஷன் அரிசி, பேராவூரணி பகுதியில் உள்ள கிராம மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து மினிலாரியில் 41 மூட்டைகளில் இருந்த 2,050 கிலோ ரேஷன் அரிசியையும், மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக மினிலாரி உரிமையாளரும், டிரைவருமான புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி நெட்டையன் குடியிருப்பை சேர்ந்த மாதவன் (வயது 20), சுமை தூக்கும் தொழிலாளியான திருமயம் அருகே உள்ள மாவடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்(19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story