சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

வேலூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு வேலூரை அடுத்த மேல்மொணவூர் மதுரா ஆவாரம்பாளையம் அருகே சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்த முயன்றனர். அவர்களை பார்த்ததும் டிரைவர் ஆட்டோவை ஆவாரம்பாளையம் கிராமத்திற்குள் ஓட்டி சென்றார். அதனால் சந்தேகம் அடைந்த பறக்கும்படை குழுவினர் காரில் ஆட்டோவை விரட்டி சென்றனர்.

சிறிதுதூரம் சென்ற நிலையில் டிரைவர் சாலையோரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து பறக்கும்படை குழுவினர் ஆட்டோவை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன்அரிசி மூட்டைகளுடன் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 2 டன் ரேஷன் அரிசி வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபகிடங்கிலும், சரக்கு ஆட்டோ வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசிலும் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story