2 டன் தக்காளியை கடத்தி வந்து விற்பனை


2 டன் தக்காளியை கடத்தி வந்து விற்பனை
x

பெங்களூருவில் இருந்து 2 டன் தக்காளியை கடத்தி வந்து வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் விற்ற பா.ஜ.க. நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். மேலும் கர்நாடக போலீசார் வாணியம்பாடியில் முகாமிட்டு 3 பேரை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

தக்காளி லாரி கடத்தல்

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் தக்காளிகளை கடத்தும் நிலை உருவானது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் நகரில் இருந்து கோலார் சந்தைக்கு ரூ.2½ லட்சம் மதிப்பிலான சுமார் 2 டன் தக்காளியை ஏற்றிச்சென்ற டிரைவரை தாக்கிவிட்டு, தக்காளி லாரியை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூருக்கு கொண்டு வந்து தக்காளியை விற்பனை செய்துவிட்டு, பெங்களூரு திரும்பிய அவர்கள் பெங்களூரு எல்லையில் வாகனத்தை விட்டுவிட்டு நம்பர் பிளேட் இல்லாத மற்றொரு வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது.

பா.ஜ.க. நிர்வாகி கைது

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தக்காளியை கடத்தியது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த டீல் பாஸ்கர் (வயது 35) மற்றும் அவரது கள்ளக்காதலி சிந்துஜா (30) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காது செய்யப்பட்ட டீல்பாஸ்கர் திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. அமைப்புசாரா தொழிலாளர் அணி செயலாளர் என்பதும், இவர் மீது ஏற்கனவே ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த குமார் உள்பட 3 பேர் ஈடுபட்டிருப்பதால் கர்நாடக போலீசார் அவர்களை பிடிக்க வாணியம்பாடியில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரியாணி ஓட்டல்கள்

கர்நாடகா பகுதியில் தொடர்ந்து தக்காளி திருடப்பட்டு வந்துள்ளது. சென்னை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் பிரியாணி கடைகள் அதிகம் இருப்பதால் இந்த ஓட்டல்களுக்கு தக்காளி விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆந்திராவில் இதேபோல 6,000 கிலோ தக்காளி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தக்காளியை கடத்தி விற்பனை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story