கண்டக்டரை தாக்கிய 2 திருநங்கைகள் கைது
கண்டக்டரை தாக்கிய 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, ஜூலை.26-
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயணி ஒருவரிடம் அங்கு இருந்த திருநங்கைகள் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த அரசு பஸ் கண்டக்டர் முத்துகருப்பன், இந்த தகராறை தடுக்க முயன்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது திருநங்கைகள் கண்டக்டரை தாக்கினர். இதைத்தொடர்ந்து திருநங்கைகளை கைது செய்யக்கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எந்த பஸ்களும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லாமல் நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கண்டக்டர் முத்துகருப்பனை தாக்கிய திருநங்கைகளான கார்த்திகா, ரேஷ்மா ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.