கேரளாவுக்கு மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
கம்பம்மெட்டுவில் இருந்து கேரளாவுக்கு மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு அனுமதி சீட்டு இல்லாமல் கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வினோத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு மலைப்பாதையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் வினோத், போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கேரள மாநில பதிவெண் கொண்ட 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றில் எம்-சாண்ட் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் இருந்தது. ஆனால் அதற்கான அனுமதி சீட்டுகள் இல்லை.
இதுகுறித்து லாரி டிரைவர்ளிடம் கேட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து 2 டிப்பர் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து புவியியல் துறை உதவி இயக்குனர் வினோத் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர்கள், டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.