2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டன
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 நாட்களாக சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
காட்டு யானைகள் அட்டகாசம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் 6 பேரை கொன்ற 2 காட்டு யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முகாமிட்டன. அதன் பின்னர் நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தன.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கும்கி யானைகளை வரவழைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கிற கும்கியும், முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என 2 கும்கி யானைகள் என மொத்தம் மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
மயக்க ஊசி செலுத்தி...
இந்த நிலையில் ஆனைமலை காப்பகத்தின் மருத்துவக்குழுவினர் ராஜேஷ் தலைமையில் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் அருகே திப்பசமுத்திரம் ஏரி பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஒரு யானைபிடிபட்டது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு யானை பிடிபட்டது. பிடிபட்ட யானையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.
இந்த யானைகளை முகாம்களுக்கு கொண்டு செல்வதா? அல்லது அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு விடுவதா? என்பது குறித்து அரசு தெரிவித்த பிறகு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.