நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது
மதுரையில் உள்ள நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காமராஜர்சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவர், தெற்கு சித்திரை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 2 பெண்கள், நகை வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்த 6 கிராம் தங்கத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர் சிவகுமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நகை திருடியது மதுரை ஒத்தக்கடை அய்யப்பன்நகரை சேர்ந்தவர் செல்வம் மகள் தாரணி (32), அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்குமார் மனைவி சந்தியா (27) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்பு இவர்கள் இருவரும், தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக் கடையிலும் 4 கிராம் தங்கத்தை திருடி உள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது மற்றொரு கடையில் நகை திருடும்போது சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.