சாலை விபத்தில் 2 பெண்கள் பலி
கரூர், குளித்தலையில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் பலியாகினர்.
பெண் பலி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள முத்துரங்கம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பூச்சியம்மாள் (வயது 56). கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று கரூர் உழவர் சந்தை அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பூச்சியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
குளித்தலை
கரூர் பண்டரிநாதன் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் நேற்று முன்தினம் தனது அக்காவான கரூர் செங்குந்தபுரம் முத்துநகர் பகுதியைச் சேர்ந்த உமாராணி (வயது 53) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.
இதில் நாகேந்திரன், உமாராணி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உமாராணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.