தேனி அருகே 2 பெண்களிடம் நகை பறிப்பு
தேனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றனர்.
தேனி:
வீரபாண்டி அருகே உள்ள ச.வாடிப்பட்டி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 36). நேற்று இரவு இவர், தனது மனைவி மலர்விழியுடன் மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள், ச.வாடிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். உப்புக்கோட்டை விலக்கு பகுதியில் அவர்கள் வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று மலர்விழியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதேபோல் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (43), தனது மனைவி வனிதாவுடன் வீரபாண்டி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தேனியை அடுத்த முத்துதேவன்பட்டி பகுதியில் அவர்கள் வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.