நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது- 15 பவுன் நகை மீட்பு
கடையநல்லூர் நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 பவுன் நகைகளை மீட்டனர்
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகை கடையில் திருடிய 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 பவுன் நகைகளை மீட்டனர்.
நகை கடையில் திருட்டு
கடையநல்லூரில் உள்ள நகைக்கடையில் கடந்த 5-ந்தேதி 2 பெண்கள் உள்பட 4 பேர் நகை வாங்குவது போன்று நடித்து, கடையில் இருந்த 1 பவுன் தங்க மோதிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடையநல்லூர் குமாரபுரம் அருகில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை வழிமறித்து விசாரித்தனர்.
4 பேர் கைது
விசாரணையில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த ஜெயபால் வயது (வயது 61), சுந்தரபாண்டியபுரம் ஆனந்தா நகர் மாந்தோப்பு பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் (40), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சந்தனம் மனைவி லட்சுமி (65), பரமக்குடி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் மனைவி சுந்தரி (65) என்பதும், இவர்கள் 4 பேரும் கடையநல்லூர் நகைக்கடையில் மோதிரத்தை திருடியதும் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் வாசுதேவநல்லூர் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் 14 பவுன் நகைகளை அபேஸ் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயபால் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 பவுன் நகைகளையும் மீட்டனர்.