2-வது ஆழ்துளை கிணற்றில் இருந்து சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணி


2-வது ஆழ்துளை கிணற்றில் இருந்து சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணி
x

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் ஆழ்துளை நீரூற்றுகிணறு அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆழ்துளை நீரூற்றுகிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து குடிநீர் தஞ்சை வெண்ணாற்றில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர போர்வெல் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கொள்ளிடத்தில் மேலும் 2 ஆழ்துளை நீரூற்றுகிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பணிகள் நிறைவு

அதன்படி கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆழ்துளை நீரூற்றுகிணறு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும்பணி நேற்று நடைபெற்றது. இதனை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். அப்போது ஆணையர் சரவணகுமார், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, தமிழ்நாடு நீர் முதலீட்டுக்கழக திட்ட மேலாண்மைக்குழு தலைவர் எழிலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் ஆற்றில் உள்ள 1-வது ஆழ்துளை நீரூற்றுகிணறு மூலம் தினமும் 12 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது நீரூற்றுகிணறு பணிகள் நிறைவடைந்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் தண்ணீர் முழு வீச்சில் வருகிறது. இதன் மூலம் 18 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும்.

30 ஆண்டுகளுக்கு தட்டுப்பாடு வராது

மின்இணைப்பு மட்டும் பெறவேண்டி உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் மின்இணைப்பு கிடைத்துவிடும். அதன்பின்னர் முழு வீச்சில் 2-வது நீரூற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் குடிநீர் பிரச்சினை இல்லை என்ற நிலை ஏற்படும். 3-வது நீரூற்றுகிணறு அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதத்துக்குள் நிறைவடையும். அப்போது மாநகராட்சிக்கு மொத்தம் 57 எம்.எல்.டி தண்ணீர் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதன்மூலம் 25 வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க இயலும். மேலும் தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகளை இணைக்க உள்ளோம். அந்த பகுதிக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story