மின்வேலியில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி
உசிலம்பட்டி அருகே கரும்பு தோட்டத்தில் உள்ள மின்வேலியில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே கரும்பு தோட்டத்தில் உள்ள மின்வேலியில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மின்வேலியில் சிக்கி சாவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்.
இவரது தோட்டத்தை அதே ஊரைச் சேர்ந்த தர்மர் என்பவர் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார்.
இந்த பகுதியில், அடிக்கடி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கரும்பு தோட்டத்திற்கு தர்மர், மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணி (வயது 70), இவருடைய தம்பி சுப்பிரமணி மகன் ஆசை பாண்டி (25) ஆகிய 2 விவசாய கூலி தொழிலாளர்களும் அந்த தோட்டத்துக்கு சென்றனர். அங்கு இருந்த மின்வேலியில் 2 பேரும் சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே இவர்கள் 2 பேரையும் காணாமல் இவர்களது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் கரும்பு தோட்டத்தில் கிடந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரும்பு தோட்டத்திற்கு மின்வேலி அமைத்ததாக கூறப்படும் தர்மரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.