கல்குவாரியில் வெடிகள் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளர்கள் பலி


கல்குவாரியில் வெடிகள் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளர்கள் பலி
x

வடமதுரை அருகே கல்குவாரியில் வெடிகள் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

தனியார் கல்குவாரி

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர், வடமதுரை அருகே உள்ள சுந்தரபுரியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இங்கு, 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று வழக்கம் போல கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். சில தொழிலாளர்கள், குவாரியில் பாறைகளை உடைப்பதற்கு வெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி குவாரியில் 200 வெடிகள் வரை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

இந்தநிலையில் கல்குவாரியின் மேலே இருந்து கற்கள் சரிந்து, சில வெடிகளின் மீது விழுந்தது. இதனால் அங்கே வைத்திருந்த வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நாலாபுறமும் கற்கள் பறந்தோடின.

அப்போது அங்கு பணியில் இருந்த அரசம்பட்டியை சேர்ந்த நாராயணன் (வயது 50), சுந்தரபுரியை சேர்ந்த வேலு என்ற மேத்யூ (55) ஆகியோர் மீது சில கற்கள் விழுந்தன. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

2 பேர் படுகாயம்

இதேபோல் குவாரியில் வேலை செய்த காமாட்சிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி (55), பாறைக்களத்தை சேர்ந்த மாரியப்பன் (47) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பழனி ஆர்.டி.ஓ. சரவணன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் மாரியம்மாள் மற்றும் அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் காந்திராஜன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கல்குவாரி வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் வடமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story