அனுமதியில்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை
அனுமதியில்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதியில்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் விடுதி
பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகபாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விடுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பக சட்டத்தின் கீழ் பதிவு செய்து அவசியம் ஆகும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை பதிவு செய்ய மதுரை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
2 ஆண்டு சிறை
மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் அலுவலத்திலும் பதிவு செய்ய வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர்கள் மீது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.