டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
x

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

லாரி மோதி வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமணமேடு பகுதியை சேர்ந்தவர் மருதை(வயது 28). இவர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மருதை படுகாயம் அடைந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் காரமடையை சேர்ந்த ஆனந்தன்(31) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மற்றொரு வழக்கு

இதேபோல் திருச்சி விமான நிலையம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இருளப்பன்(65). இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பட்டியை சேர்ந்த குருச்சந்திரன்(31) என்பவர் ஓட்டி வந்த லாரி அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த இருளப்பன் இறந்தார். இந்த வழக்கும் திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சாந்தி அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட குருசந்திரனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார்.


Next Story