மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகரில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் தீவிர ரோந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க ேபாலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் தாளமுத்து நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாளமுத்துநகர் போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட டேவிஸ்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கஞ்சா விற்பனை
உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்று கொண்டிருந்த 2 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்க மாரியப்பன் (வயது 33), தூத்துக்குடி பூபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் தேவசகாயம் (33) ஆகியோர் என்றும், அவர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தத.
2 பேர் கைது
இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க மாரியப்பன், தேவசகாயம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் அந்த 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.