ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
அரக்கோணத்தில் ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் திருத்தணி அகிய ரெயில் நிலையங்களிலும் மற்றும் அவ்வழியாக வந்து செல்லும் ரெயில்களிலும் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தடைந்த போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், செந்தில்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கிருஷ்ணகுமார், அரவிந்த், ஆதித்யன் ஆகியோர் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது பள்ளப்பட்டியை சேர்ந்த அப்துல் அலீம் (வயது 19), முகமது ஹீர்சாத் (25) ஆகியோர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட அப்துல் அலீம் மற்றும் முகமது ஹீர்சாத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.