பெண்ணிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
அருமனை அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருமனை:
அருமனை அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
அருமனை அருகே உள்ள மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவர் மேல்புறம் பகுதியில் அஞ்சலக சேமிப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று அஞ்சலக சேமிப்புக்காக செம்மங்காலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த இரண்டு வாலிபர்கள் பரிமளத்தின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மார்த்தாண்டம் நோக்கி தப்பி சென்றனர்.
இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அருமனை போலீசார் தனிபிரிவு போலீசருக்கு தகவல் கொடுத்தனர். தனி பிரிவு போலீசார் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தினர்.
2 பேர் கைது
இந்தநிலையில் அந்த வாலிபர்கள் கன்னியாகுமரி அருகே வால்பாறை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காட்டாகடையை சேர்ந்த ரஞ்சித் (வயது24), அபின்ராய் (17) என்பதும், இவர்கள் மேல்புறத்தில் பரிமளாவிடம் இருந்து செல்போன் பறித்ததும் ெதரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து அருமனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர்களது ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசாரின் துரித நடவடிக்கையால் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதை பொதுமக்கள் பாராட்டினர்.