சித்தோடு அருகே மின்ஊழியரின் வீட்டில் திருடிய 2 வாலிபர்கள் கைது; 17 பவுன் நகை மீட்பு
சித்தோடு அருகே மின் ஊழியரின் வீட்டில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 17 பவுன் நகையையும் மீட்டனர்.
பவானி
சித்தோடு அருகே மின் ஊழியரின் வீட்டில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 17 பவுன் நகையையும் மீட்டனர்.
25 பவுன் நகை திருட்டு
சித்தோட்டை அடுத்த குமிலாம்பரப்பு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56). இவர் சித்தோட்டில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் 11-ந் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், வீட்டின் உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகளையும் காணவில்லை, யாரோ மர்ம நபர்கள், வீடு புகுந்து 25 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பாலம் பகுதியில் 2 பேர் சந்தேகப்படும் வகையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் கார்த்தி (வயது 19), அதே பகுதியை சேர்ந்த அப்துல் மாலிக் என்பவரின் மகன் அமானுல்லா (22) என்பதும், நண்பர்களான 2 பேரும் சேர்ந்து கோவிந்தராஜ் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகையை திருடி சென்றதும்,' தெரியவந்தது.
மீட்பு
மேலும் நேற்று முன்தினம் இரவு பவானி அருகே உள்ள காடையாம்பட்டி ஏரி அருகே நடந்து சென்றவரிடம் பணம் பறித்ததும் இவர்கள் தான் எனவும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகளையும் மீட்டனர்.