பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது
ஏரல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறிவைத்து நகை வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏரல்:
ஏரல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை குறிவைத்து நகை வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் வழிப்பறி
ஏரல் அருகே முக்காணி தேவர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 51). இவர் ஏரல் பஸ்நிலையம் அருகே சுக்கு காபி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 20-ந் தேதி இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் மனைவி பாக்கியலட்சுமியுடன் சென்று கொண்டிருந்தார்.
ஏரல் முக்காணி ரோடு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, உமரிக்காடு அருகில் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியை பறித்தனர். சுதாரித்து கொண்ட பாக்கியலட்சுமி மர்மநபர்களுடன் போராடியதில் சங்கிலியின் பாதிபகுதியான 13 கிராம் நகையை பறித்துக் கொண்டு 2 மர்ம நபர்களும் தப்பிச் சென்று விட்டனர். மீதமுள்ள நகை பாக்கியலட்சுமி கைகளில் சிக்கியிருந்தது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் கடந்த 3-ந் தேதி இரவு வடக்கு ஆத்தூரை சேர்ந்த பாலகணேஷ் (43) என்பவர் மனைவி பார்வதியுடன் மோட்டார் சைக்கிளில் ஏரல் வந்தார். அங்குள்ள பஸ்நிலையம் அருகிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டு ஏரல்-முக்காணி ரோட்டில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
உமரிக்காடு பட்டறை அருகில் சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பார்வதியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துள்ளனர். பார்வதி சுதாரித்துகொண்டு சங்கிலியை பிடித்து கொண்டு போராடியுள்ளார். இதில் சங்கிலி துண்டானதில் ஒருபகுதியான 4 பவுனை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி ெசன்று விட்டனர்.
வாகன சோதனை
இந்த 2 வழிப்பறி சம்பவங்கள் குறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உமரிக்காடு அருகே ஆலடியூர் பஸ்நிறுத்தத்தில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்தவுடன், வந்த வழியிலேயே மோட்டார் சைக்கிளை திருப்பினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
2 வாலிபர்கள் சிக்கினர்
விசாரணையில், மேற்கண்ட 2 பெண்களிடமும் நகைகளை வழிப்பறி செய்தது அவர்கள் தான் என தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் வேல்சாமி மகன் மாரி செல்வம் (22), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சத்யவாசகம் மகன் சிவா (22) எனவும் தெரிந்தது. அந்த இருவரையும் ஏரல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளை மீட்ட போலீசார், வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.