பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
மார்த்தாண்டம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பிலாவிளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவரது மனைவி மெல்பா (வயது38). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மெல்பா கடையில் இருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்களில் ஒருவர் கடைக்கு சென்று மெல்பாவிடம் சிகரெட் கேட்டார். மெல்பா சிகரெட் எடுக்க திரும்பி போது, அவரது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து மெல்பா கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
2 வாலிபர்கள் கைது
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் நகைபறிப்பில் ஈடுபட்டது மேல்பாலை பகுதியை சேர்ந்த சிபின் (26), சுஜித் (23) என்பது ெதரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மெல்பாவிடம் இருந்து பறிக்கப்பட்ட நகை மீட்கப்பட்டது.
மேலும், கைதான இருவருக்கும் வேறு நகை பறிப்பு சம்பங்களில் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.