மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.
மோட்டார் சைக்கிள் திருட்டு
திசையன்விளையைச் சேர்ந்தவர் தேவா ஸ்டாலின். இவருடைய மகன் டோமினிக் வசந்த் (வயது 23). இவர் கடந்த 3.6.2023 அன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அங்கு நேருபூங்கா அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த போது, அவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர் திருடி சென்று விட்டாராம். இதே போன்று தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த செல்வக்குமார் மகன் வெற்றிவேல் (24) என்பவர் கடந்த 18.6.2023 அன்று முத்துநகர் கடற்கரை பூங்கா பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த போது, மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இது குறித்த புகார்களின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், திருச்செந்தூர் சரவணபொய்கை சாலையை சேர்ந்த அருணாச்சலம் மகன் அரிகரன் (19), ஆறுமுகநேரி மடத்துவிளையைச் சேர்ந்த ஓஸ்வால்ட் மகன் ஜோஸ்வின் டெரில் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அரிகரன், ஜோஸ்வின் டெரில் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர்.