ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் சாவு


ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் உள்ள ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் உள்ள ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சென்னையை சேர்ந்தவர்கள்

சென்னை வியாசர்பாடி சுந்தரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 30), பெரம்பூர் ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் நாகராஜ் (30). இவர் இருசக்கர வாகன தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். இவர்கள் இருவரும் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 28-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த நசீர் ஷெரீப் (30), அஜித் (26), ராஜி (40), சங்கர் (23) ரமேஷ் (37) ஆகியோருடன் இருவரும் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்

பின்னர் அங்கிருந்து காரை வாடகைக்கு பிடித்து குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் நேற்று குமரி மாவட்டம் திற்பரப்பு அருவி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க வந்தனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அறிந்த அவர்கள் மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதிக்கு சென்றனர். அங்கு தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் அனைவரும் குளித்தனர். அந்த சமயத்தில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கார்த்திகேயன், நாகராஜ் ஆகிய 2 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

2 பேர் சாவு

இதனை பார்த்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. நண்பர்களை காப்பாற்ற முடியாத சோகத்தில் அழுதபடி நின்றனர்.

பின்னர் இதுபற்றி குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கார்த்திகேயன் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் நாகராஜ் உடல் கிடைக்கவில்லை. வெகுநேரமாக தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. பின்னர் 4 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு நாகராஜிம் பிணமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணன், ஏட்டு பிரபுதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். இதனை தொடர்ந்து திருவட்டார் போலீசார் 2 பேருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலியான கார்த்திகேயனுக்கு விமலா என்ற மனைவி உள்ளார். நாகராஜ் திருமணமாகாதவர்.

காரணம் என்ன?

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனை அறியாமல் வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டதால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததால் 2 பேரும் அடித்து செல்லப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா வந்த இடத்தில் 2 வாலிபர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story