பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர்

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவர் கடந்த 20-ந்தேதி மாலையில் செஞ்சேரியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள தனது வயலுக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் லலிதாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லலிதாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

வாகன தணிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தியதில், லலிதாவின் கழுத்தில் அணிந்திருந்தது ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கவரிங் சங்கிலி என்பது தெரியவந்தது. ஆனாலும் குற்றப்பிரிவு போலீசார் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் செஞ்சேரி பிரிவு ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் வேப்பந்தட்டை தாலுகா, பாலையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பொல்லார்ட் என்ற நவீன்குமார் (23), பெரம்பலூர் தாலுகா அய்யலூர் செல்லியம்மன் கோவில் தெருவை சோ்ந்த சுப்பிரமணி மகன் கலையரசன் (23) என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இவர்கள் 2 பேரும் லலிதாவின் கவரிங் சங்கிலியை பறித்ததும், மேலும் நவீன்குமார் சிறுவாச்சூரில் வசித்து வந்த மெக்கானிக் சரத்குமார் என்பவரது வீட்டில் நகை-பணம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து நவீன்குமார், கலையரசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கவரிங் சங்கிலி, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிாிவு போலீசாரையும், பெரம்பலூர் போலீசாரையும் போலீஸ் சூப்பிரண்டு மணி வெகுவாக பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.


Next Story