கஞ்சா செடி வளர்த்த 2 வாலிபர்கள் கைது
கந்திலி அருகே வீட்டின் அருகில் கஞ்சா செடி வளர்த்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா செடி வளர்ப்பு
கந்திலி ஒன்றியம் கும்மிடிகாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஞானமூர்த்தி (வயது 28). மோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மகன் பூந்தமிழன் (21). ஞானமூர்த்தி, பூந்தமிழன் ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்களுக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஞானமூர்த்தி நாரியூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
வீட்டின் அருகிலேயே இருவரும் எருக்கஞ்செடி வளர்த்து, அதன் நடுவில் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர். இது குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சோதனை செய்தனர்.
2 வாலிபர்கள் கைது
அப்போது எருக்கஞ்செடிகளுக்கு நடுவில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சா செடிகளை போலீசார் பிடுங்கி அழித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் கஞ்சா பயிரிட்ட ஞானமூர்த்தி மற்றும் பூந்தமிழன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.