பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது


பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது
x

சென்னிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தார்கள். ரூ.30 ஆயிரம்-கணினி பிரிண்டர் ஆகியவை மீட்கப்பட்டது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தார்கள். ரூ.30 ஆயிரம்-கணினி பிரிண்டர் ஆகியவை மீட்கப்பட்டது.

தொடர் திருட்டு

சென்னிமலை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தார்கள். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

அதன் அடிப்படையில் சித்தோடு எலவமலை மூவேந்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31), பெருமாள்மலை சூரியம்பாளையத்தை சேர்ந்த பிரபு (32) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

சிறையில் அடைப்பு

விசாரணையில் அவர்கள் இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னிமலை அம்மாபாளையத்தில் சதாசிவம் என்பவர் நடத்தி வந்த டீ கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடியதையும், சென்னிமலை அருகே தோப்புக்காடு பகுதியில் செயல்பட்டு வந்த கூட்டு பண்ணை உழவர் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கணினி பிரிண்டர் ஆகியவற்றை திருடியதையும், மேலும் சென்னிமலை சிறுக்களஞ்சி எல்லக்காடு பகுதியில் விவசாயி ஒருவர் வீட்டில் ½ பவுன் தங்க மோதிரம் மற்றும் பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாரிமுத்து, பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மற்றும் கணினி பிரிண்டர் ஆகியவற்றை மீட்டார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.


Next Story