ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்


ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்
x

தஞ்சை புது ஆற்றில் குளித்தபோது 2 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு-பேரணி திருவாரூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 55 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு வந்தனர். அந்த பஸ், தஞ்சை வழியாக சென்றபோது பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து சுற்றிப்பார்த்தனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

அப்போது எடப்பாடி தாலுகா நங்கவள்ளி ஒன்றியம் கலர்பட்டி அருகே உள்ள இருப்பாலி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தாமரைச்செல்வன்(வயது 18), சேலம் ஜலகண்டபுரம் தினேஷ்குமார்(18) ஆகிய இருவரும் கல்லணைக்கால்வாய் ஆற்றில் குளித்தனர். இதில் ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் தினேஷ்குமார் ஆற்றங்கரையோரம் இருந்த செடியை பிடித்துக் கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஒருவர் மீட்பு; மற்றொருவரின் கதி என்ன?

அதன்பேரில் தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தினேஷ்குமாரை காப்பாற்றினர். ஆனால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான தாமரைச்செல்வனை தொடர்ந்து தேடி வருகின்றனர். அவருடைய கதி என்ன? என்று தெரியவில்லை. மாயமான தாமரைச்செல்வன் நங்கவல்லி ஒன்றிய இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடும் பணி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநாட்டுக்கு சென்ற வெங்கடேசன் எம்.பி., சின்னதுரை எம்.எல்.ஏ., இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், செயலாளர் மாரியப்பன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் மாணவர் குளித்த இடத்தை வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை பார்வையிட்டு, விரைந்து அவரை மீட்குமாறு கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக தஞ்சை மேற்கு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Next Story