பண்ருட்டி அருகே வங்கி காசாளர் வீட்டில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது திருடிய காரில் தப்ப முயன்ற போது போலீசார் சுற்றி வளைத்தனர்


பண்ருட்டி அருகே வங்கி காசாளர் வீட்டில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது திருடிய காரில் தப்ப முயன்ற போது போலீசார் சுற்றி வளைத்தனர்
x

பண்ருட்டி அருகே வங்கி காசாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிய காரில் தப்ப முயன்ற போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

கடலூர்

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 28). இவர் நெய்வேலியில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக உள்ளார்.

நெய்வேலியில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். 2 நாட்களுக்கு ஒருமுறை ஒறையூரில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 22-ந்தேதி இரவு சசிக்குமாரின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும், பீரோவில் இருந்த கார் சாவியை பயன்படுத்தி வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் அவர்கள் திருடி சென்றுவிட்டனர்.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

திருடுபோன் காரின் எண்ணின் அடிப்படையில் தனிப்படையினர் விசாரித்தனர். அதில், அந்த கார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக திருவண்ணாமலை பகுதிக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவண்ணாமலைக்கு விரைந்து சென்று, கார் தொடர்பான தகவல் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.

2 வாலிபர்கள் சிக்கினர்

அப்போது, திருவண்ணாமலையில் கிரிவலப் பாதைக்கு சென்றபோது, அங்கு ஒரு இடத்தில் திருடுபோன கார் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு போலீசார் சென்று பார்க்கையில், அந்த காரின் பதிவு எண்ணை 2 பேர் மாற்றிக்கொண்டு இருந்தனர்.

போலீசாரை பார்த்ததும், அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை துரத்தி சென்று, வழிமறித்து மடக்கி பிடித்தனர். அவர்களை பண்ருட்டிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26), யுவராஜ் (22) என்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு வைத்துள்ளார்கள், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story