20 ஆயிரம் ஏக்கர் விதை பண்ணை அமைக்க இலக்கு
20 ஆயிரம் ஏக்கர் விதை பண்ணை அமைக்க இலக்கு
போடிப்பட்டி
திருப்பூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விதைப் பண்ணை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆயக்கட்டு
விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அரசு மற்றும் தனியார் உற்பத்தியாளர்களுக்கு விதைச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதைப்பண்ணை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ரகம் அறிவிக்கப்பட்ட ரகமாகவும், காலக்கெடு நாள் முடிவதற்குள் விதைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். விவசாயிகள் நடவுப் பணியின் போது ஆதாரநிலை விதைப்பண்ணைகளுக்கு 4 அடிக்கு 1 அடி பட்டம் விட்டும், சான்றுநிலை விதைப்பண்ணைகளுக்கு 8 அடிக்கு 1 அடி பட்டம் விட்டும் நடவு செய்ய வேண்டும்.இதனால் கலவன்களை அகற்றுதல், உரம் இடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
வயல் ஆய்வு
விதைப்பறிக்கைகள் பதிவுக்கு பதிவுக் கட்டணம் ஒரு விதைப்பு அறிக்கைக்கு ரூ. 25, வயல் ஆய்வு கட்டணம் ஏக்கருக்கு ரூ. 100 மற்றும் பகுப்பாய்வுக் கட்டணம் குவியலுக்கு ரூ. 80 என மொத்தம் ரூபாய் 205 செலுத்தி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் அலுவலகம், ஆறாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூரில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படும் நெல் விதைப்பு அறிக்கைகள் சரிபார்க்கப்பட்டு விதைச்சான்று எண் வழங்கப்பட்டு உரிய விதைச் சான்று அலுவலர்களுக்கு பூக்கும் மற்றும் முதிர்ச்சி பருவ வயல் ஆய்விற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
வயல் ஆய்வில் தேர்ச்சி பெறும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.அறுவடைக்கு முன் பிற ரக கலப்பு இல்லாமல் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.அறுவடை செய்யப்பட்ட விதை நெல்லை புதிய கோணிப்பைகளில் பிடித்து அட்டைகள், ஈய விலைகள் பொருத்தப்பட வேண்டும். விதை சுத்திகரிப்பு, பகுப்பாய்வு பணிகள் முடிந்த பின்னர் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட விதை நெல் மாதிரிகள் புறத்தூய்மை 98 சதவீதம் முளைப்புத் திறன் 80 சதவீதம், ஈரப்பதம் 13 சதவீம் மற்றும் கலவன்கள் சதவீதம் ஆதாரங்களை விதைக்கு 0.05 சதவீதம் சான்றுநிலை விதைகளுக்கு 0.2 சதவீதம் அவசியமாகும்.பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற விதை குவியல்கள் சான்றட்டை பொருத்தப்பட்டு தமிழ்நாடு சான்று செய்யப்பட்ட தரமான விதைகளாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். திருப்பூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விதைப் பண்ணை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.