ரூ.20¼ கோடியில் குடிநீர் அபிவிருத்தி பணிகள்


ரூ.20¼ கோடியில் குடிநீர் அபிவிருத்தி பணிகள்
x

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.20¼ கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் டிஜிட்டல் நூலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை

வளர்ச்சி திட்டப்பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி தலைவராக அதே பகுதியை சேர்ந்த தி.வ.மனோகரன் உள்ளார். மேலும் இவர், விளாப்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கட்டிட குழு தலைவராக இருந்து வருகிறார். இவர் தலைவராக பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ரூ.1 கோடியே 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து தி.வ.மனோகரன் கூறியதாவது:-

விளாப்பாக்கம் பேரூராட்சி சாவடி தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, புதிய காலனி பகுதியில் ரூ.41 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மழைநீர் கால்வாய் மற்றும் பேவர் பிளாக் சாலை, சின்ன தக்கை பகுதியில் ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் மழைநீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை, தத்திரவாடி பகுதியில் ரூ.11 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கூத்தாடி குட்டை சீரமைப்பு, புதிய காலனி பகுதியில் ரூ.5½ லட்சத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், தொகுப்பு வீடு பகுதியில் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தில் மழைநீர் கால்வாய், ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வெள்ளைக்குளம் சீரமைப்பு, ரூ.27½ லட்சத்தில் 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சீரமைப்பு, சிள்ளதக்கை பகுதியில் ரூ.12 லட்சத்தில் சமுதாய கழிப்பிடம், 13,14-வது வார்டு பகுதியில் ரூ.15 லட்சத்தில் உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் உள்பட ரூ.1 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் விளாப்பாக்கம் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் விளாப்பாக்கம் ஏரி பகுதியில் ரூ.3½ லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணி, புதிய காலனி குட்டை பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி, தாதன்குளம் ரூ.5½ லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி, தென்கழனியில் ரூ.5 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பிடம் சீரமைக்கும் பணி, தென்கழனி சாலை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பிடம் சீரமைக்கும் பணி, அரிச்சந்திரன் குட்டை, ஆதிதிராவிடர் காலனி, மந்தைவெளி பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் சீரமைக்கும் பணி, மந்தை வெளி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாய், சிறுபாலம் கட்டும் பணி, விளாப்பாக்கம் பஸ் நிலையம் முதல் பச்சையம்மன் கோவில் வரை ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி, ரூ.63½ லட்சத்தில் கொசவன் குட்டை சீரமைக்கும் பணிகள் உள்பட ரூ.1 கோடியே 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

டிஜிட்டல் நூலகம்

இவை தவிர விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு வேப்பூரில் இருந்து விளாப்பாக்கம் வரை 12 கிலோ மீட்டர் வரை குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளுக்கு ரூ.20 கோடியே 30 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏகாம்பர நகர், அர்ஜுனன் நகர், அண்ணா நகர் 1,2-வது தெரு, லட்சுமிபுரம் 3-வது தெரு, ஆற்காடு ரோடு, கெங்கையம்மன் கோவில் தெரு, புதிய காலனி 3-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.85 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. விளாப்பாக்கம் பேரூராட்சியில் டிஜிட்டல் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாண்டஸ் புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று எனது சொந்த பணத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மண்ணை கொட்டி சீரமைத்து கொடுத்தேன். மேலும் புயலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வந்தேன். விளாப்பாக்கம் ஏரியில் முள்செடி அப்புறப்படுத்தப்பட்டு 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை, மூக்குகண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது. பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இணைந்து செயல்படுவேன்

மேலும் விளாப்பாக்கம் பேரூராட்சியை மாவட்டத்தில் முதன்மை பேரூராட்சியாக மாற்ற அமைச்சர் ஆர்.காந்தி, ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோரின் ஒத்துழைப்போடு, விளாப்பாக்கம் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் பி.கே.பாபுவின் ஆலோசனையுடன், பேரூராட்சி துணைத்தலைவர் கா.ரேகா கார்த்திகேயன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவருடன் இணைந்து செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story