சிவகிரி அருகே கீழ்பவானி வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை தடுத்த விவசாயிகள் 20 பேர் கைது


சிவகிரி அருகே கீழ்பவானி வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை தடுத்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே கீழ்பவானி வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை தடுத்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கான்கிரீட் சுவர்

சிவகிரி அருகே உள்ள மாரப்பன்பாளையம் கன்னிமார் தோட்டம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் 200 மீட்டர் நீளத்துக்கு கரையில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டுவிட்டனர். பின்னர் பக்கவாட்டில் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்போது பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மீண்டும் அங்கு கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இதையறிந்த விவசாயிகள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் சுவர் அமைக்க கூடாது என்று பணியை தடுக்க முயன்றனர்.

20 பேர் கைது

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், நீர்வளதுறை செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் விவசாயிகள் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் வாகனத்தில் ஏற்றி சிவகிரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நீர்வளத்துறை உதவி பொறியாளர் முருகேசன் முன்னிலையில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி நடந்தது.


Next Story