மினி லாரி கவிழ்ந்து 20 பேர் காயம்


மினி லாரி கவிழ்ந்து 20 பேர் காயம்
x

ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

மினி லாரி கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆடி கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருந்து நேற்று ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மினி லாரியில் சென்றனர். குன்னத்தூரை சேர்ந்த சின்னராஜ் (வயது 55) மினி லாரியை ஓட்டிச் சென்றார்.

ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஏலகிரி மலை 3-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 3 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ஏலகிரி மலை சப்- இன்ஸ்பெக்டர் மயில்வாகனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மினி லாரியை ஓட்டிச்சென்ற டிரைவரும், உரிமையாளருமான சின்னராஜ் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

கலெக்டர் ஆறுதல்

விபத்தில் காயமடைந்த செல்வம் (62), நடராஜன் (47), புஷ்பா (52), மாரியம்மாள் (50), ஜோதி (32), செல்வி (47), முருகன் (31), ஜெயபிரியா (23), மம்தா (17), தமிழ்செல்வன் (15), கனகராஜ் (52), சாரதி (15), செந்தாமரை (62), சின்னத்தாய் (55), சர்மிளா (12) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


Next Story