கடலூரில் பிரபல தியேட்டரில் ரூ.20 லட்சம் கையாடல் மேலாளர் கைது
கடலூரில் பிரபல தியேட்டரில் ரூ.20 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
ரசீது போடாமல் முறைகேடு
கடலூர் அண்ணாபாலம் அருகில் பிரபல தியேட்டர் இயங்கி வருகிறது. இந்த தியேட்டரில் கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக தியேட்டரில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கான தொகையை உரிமையாளர் கணக்கிடும் போது, குறைவாக காணப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர், ஊழியர்களிடம் விசாரித்ததில், மேலாளர் பாலமுருகன் தின்பண்டங்களுக்கு ரசீது போடாமல் ஊழியர்களுடன் சேர்ந்து முறைகேடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலாளர் கைது
விசாரணையில் தியேட்டர் மேலாளர் பாலமுருகன், ஊழியர்கள் 7 பேருடன் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை கேண்டீனில் தின்பண்டங்கள் விற்பனையான தொகையை ரசீது போடாமல் பலமுறை பணத்தை கையாடல் செய்ததும், அந்த பணத்தை வங்கி மூலம் பாலமுருகன் பிற ஊழியர்களுக்கு பிரித்து அனுப்பியதும், இதுவரை சுமார் ரூ.20 லட்சம் கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் டிக்கெட் பதிவு செய்யப்படும் கட்டணத்தையும் அவ்வப்போது கையாடல் செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஊழியர்கள் குமார் உள்ளிட்ட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல தியேட்டரில் மேலாளர் மற்றும் ஊழியர்கள் ரூ.20 லட்சம் கையாடல் செய்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.