ரூ.20 லட்சம் உண்டியல் காணிக்கை
நெல்லையப்பர் கோவிலில் ரூ.20 லட்சம் உண்டியல் காணிக்கை
நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நிறுவப்பட்டுள்ள 21 உண்டியல்கள் கடந்த மே மாதம் 2-ந்தேதி திறந்து எண்ணப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மீண்டும் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
கண்காணிப்பு அதிகாரி நாகர்கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்குப் பிரிவு ஆய்வர் தனலெட்சுமி என்ற வள்ளி, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, சூப்பிரண்டு சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலையில் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காணிக்கை பணம் மற்றும் பொருட்கள் அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்து எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம் ஆகியோர் ஈடுபட்டனர்.
இதில் ரூ.20,05,597 ரொக்கமும், 84.200 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 395 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைக்கப் பெற்றன. மேலும் வெளிநாட்டுப் பணம் 10 தாள்களும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.