20 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது
20 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், அருணகிரிமங்கலம் கிராமத்தில் சாராயம் தயாரிப்பதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் நேற்று அருணகிரிமங்களம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மணியின் மகன் விஜயகுமார் என்பவரது கரும்பு காட்டில் சோதனையிட்டபோது, அதே கிராமத்தில் கிழக்கு தெருவை சேர்ந்த ராசாங்கம்(வயது 42) என்பவர் அங்கு சாராயம் தயாரித்தது தெரியவந்தது. மேலும் அங்கு சாராயம் தயாரிக்க பேரலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி, ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர். மேலும் ராசாங்கத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த பகுதிகளில் யாரேனும் இது போன்று தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.