குப்பை சேகரிப்பு, சாக்கடை அடைப்பை சரிசெய்ய ரூ.2½ கோடிக்கு வாங்கப்பட்ட 20 புதிய வாகனங்கள்
வேலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு, சாக்கடை அடைப்பை சரிசெய்ய ரூ.2½ கோடிக்கு வாங்கப்பட்ட 20 புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
வேலூர், மார்ச்.15-
வேலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு, சாக்கடை அடைப்பை சரிசெய்ய ரூ.2½ கோடிக்கு வாங்கப்பட்ட 20 புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
குப்பை சேகரிப்பு வாகனங்கள்
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள், சாக்கடை அடைப்பை சரிசெய்யும் வாகனங்கள் என 23 வாகனங்கள் ரூ.2 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. கார்த்தியேன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வாகனங்களை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மண்டலகுழு தலைவர்கள் புஷ்பலதாவன்னியராஜா, நரேந்திரன், யூசுப்கான், வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள் கணேஷ்சங்கர், பாபிகதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கவும், மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றவும் குப்பை சேகரிப்பு வாகனங்கள் வாங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சியில் 20 வாகனங்கள் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அடைப்பினை சரிசெய்யவும், கழிவுநீர் உறிஞ்சவும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது ரூ.1 கோடிக்கு 3 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை பணிக்கு...
அதன்படி ரூ.49 லட்சத்துக்கு வாங்கப்பட்ட வாகனம் பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பினை சரிசெய்யவும், நீரை உறிஞ்சும் திறன் கொண்டது. ரூ.18 லட்சத்துக்கு வாங்கப்பட்டமற்றொரு வாகனம் சிறிய தெருக்களில் கால்வாயில் உள்ள அடைப்பினை சரிசெய்யும். மேலும் ரூ.33 லட்சத்துக்கு வாங்கப்பட்ட வாகனம் கால்வாய், பாதாள சாக்கடை நீரை அகற்றவும், அடைப்பை சரிசெய்யவும், கால்வாய் மண்ணை அகற்றும் தன்மை கொண்டது. இந்த வாகனங்கள் தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
============