மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
x

ஈரோட்டில், ஓட்டை பிரித்து மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோட்டில், ஓட்டை பிரித்து மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மளிகைக்கடை உரிமையாளர்

திருநெல்வேலியை சேர்ந்தவர் அழகுசெல்வன் (வயது 40). இவர், ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அழகுசெல்வன் தனது மனைவி ஜோதி மற்றும் 2 மகள்களுடன் ஸ்டோனி பாலம் பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை அழகுசெல்வன் ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்று கதவின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்தன.

நகை -பணம் கொள்ளை

மேலும் வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு பெரிய அளவில் துளை இருந்ததை கண்டு அழகுசெல்வன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அழகுசெல்வன் வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

போலீசார் விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் ஓட்டை பிரித்து உள்ளே குதித்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மளிகை கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Next Story