கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 20 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை
கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 20 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை
நாச்சியார்கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பாரதி நகரில் வசித்து வருபவர் முத்துக்குமரன். இவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஓகைகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
முத்துக்குமரன், நாச்சியார்கோவில் லட்சுமி நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பத்திரிக்கை அடித்து முதல் பத்திரிக்கையை திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வைப்பதற்காக நேற்று முன்தினம் மாலை சென்றார்.
20 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை
அன்று இரவு அவர் வீட்டுக்கு திரும்பி வந்த பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
மேலும் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பொருட்களும், பீரோவில் வைத்திருந்த துணிமணிகளும் சிதறி கிடந்தன.
மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசில் முத்துக்குமரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடு கட்டுவதற்கு கடன் வாங்கிய ரூ.2 லட்சத்தில் ரூ.1 லட்சத்தை கட்டிடம் கட்டும் என்ஜினீயரிடம் கொடுத்து விட்டு மீதி 1 லட்சத்தை முத்துக்குமரன் பீரோவில் வைத்திருந்தார். அந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.