சூறாவளி காற்றில் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன


சூறாவளி காற்றில் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன
x

பள்ளிகொண்டா அருகே சூறாவளி காற்று வீசியதில் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சுமார் 20 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வேலூர்

மின்கம்பங்கள் சாய்ந்தன

அக்னி நட்சத்திரம் முடிந்தும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகொண்டா அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சூறாவளி காற்று வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து கிடந்தன. சின்னசேரி, அகரம்சேரி, பள்ளிகுப்பம், கூத்தம்பாக்கம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் 20 மணி நேரமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.

பொதுமக்கள் அவதி

மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியை மேற்கொண்டாலும், நேற்று மாலை 6 மணி வரை அந்தப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை.

இது குறித்து அந்த பகுதி இளநிலை பொறியாளரிடம் கேட்டதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு வருகிறோம், உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்றார்.

20 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்ததால் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இன்று (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் தொடர்ந்து 48 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் நாங்கள் அவதிப்படுவோம் என இல்லத்தரசிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story