4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்


4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின்படி, போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் ஆகியோர் நேற்று காலை முதல் ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி பஸ் நிலையத்தில் ராஜன் என்பவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சேரிங்கிராசில் பெட்டிக்கடை வைத்திருந்த கிஷோர் குமார் என்பவரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் பிங்கர்போஸ்ட் மற்றும் மஞ்சக்கொம்பை பகுதியிலும் 2 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு பணியை நேற்று முதல் தீவிரபடுத்தி உள்ளோம். இதன்படி முதல் முறையாக புகையிலை பொருள்கள் விற்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. 2-வது முறை மீண்டும் விற்பனை செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story