20 ஆயிரம் கடைகள் அடைப்பு
கர்நாடக அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் 12 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது. 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
கர்நாடக அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் 12 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது. 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
குறுவை சாகுபடி
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் கருக தொடங்கியது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. இதனால் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.
20 ஆயிரம் கடைகள் அடைப்பு
கர்நாடக அரசை கண்டித்து காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி நேற்று மாவட்டத்தில் வேளாங்கண்ணி, திருமருகல், திட்டச்சேரி, தலைஞாயிறு, வேதாரண்யம், கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. குறிப்பாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, கடை தெரு, நாகை- நாகூர் மெயின் ரோடு, வேளாங்கண்ணி மார்க்கெட் சாலை, பறவை காய்கறி சந்தை, வேதாரண்யம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததன.
முற்றுகை போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் தி.மு.க. கூட்டணி கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆகியவை சார்பில் நேற்று நடைபெற்றது. நாகை ெரயில் நிலையம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சிகள், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று அருகில் உள்ள நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் உள்ளே செல்ல முயன்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும். இதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய, கர்நாடக அரசை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
12 இடங்களில்
நாகூர் கடைவீதி, நாகூர் தர்கா, திட்டச்சேரி கடைவீதி, திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், தலைஞாயிறு உள்ளிட்ட மாவட்டத்தில் 12 இடங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருமருகல்
திருமருகல், திட்டச்சேரி, திருப்புகலூர், கங்களாஞ்சேரி உள்ளிட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விவசாயிகள், வியாபாரிகள், வார்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளை அடைத்தனர். திருமருகல் தபால் நிலையம் முன்பு திருமருகல் தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் செயலாளர் செல்வசெங்குட்டுவன் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடந்தது. அதேபோல் திருமருகல் தெற்கு ஒன்றியம் சார்பில் திருக்கண்ணபுரம் தபால் நிலையம் முன்பு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமையிலும், திட்டச்சேரி தபால் நிலையத்தில் திட்டச்சேரி தி.மு.க. நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையிலும் முற்றுகை போராட்டம் நடந்தது.
வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி, திருப்பூண்டியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வேளாங்கண்ணி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர்
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கீழ்வேளூர் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கீழ்வேளூர், சிக்கல், ஆழியூர் தேவூர், கிள்ளூக்குடி சாட்டியக்குடி, வலிவலம், நீலப்பாடி கூத்தூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
வாய்மேடு
அதேபோல் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தலைஞாயிறு தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகா குமார் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
வேதாரண்யம்
வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் தி.மு.க. நகரச்செயலாளர் புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குரவப்புலத்தில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதாரண்யம், குரவப்புலம், கரியாபட்டினம், செம்போடை உள்ளிட்ட 60 ஊராட்சி பகுதிகளில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
நாகூர்
நாகையை அடுத்த நாகூரில் வணிகர், வர்த்தகர் சங்கங்கள் சார்பில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய கடைதெரு, நியூ பஜார் சாலை, தர்கா மார்க்கெட் உட்புறம் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் நாகூரில் கடைத்தெரு பகுதிகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.