20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் செய்ததால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்த போராட்டம்
ஒரு கிலோ வாட் கட்டணத்தை ரூ.154 ஆக உயர்த்தி இருப்பதை திரும்ப பெற்று மீண்டும் ரூ.35 ஆக மாற்ற வேண்டும். சிறு-குறு தொழிற்சாலைகளுக்கு உயர்த்திய 430 சதவீதம் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். 'பீக் அவர்ஸ்' எனப்படும் பரபரப்பான நேர மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மின்கட்டண முறையை மாற்ற வேண்டும். சூரியசக்தி மின்சார உற்பத்திக்கான 'நெட்வொர்க்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
'மல்டி இயர் டேரிப்' முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். எல்.டி. கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ரூ.500 கோடி உற்பத்தி பாதிப்பு
இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. ஈரோட்டில் சென்னிமலை ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி சார்ந்த பல்வேறு ஆலைகள், கான்கிரீட் கற்கள் உற்பத்தி, தொழிற்பேட்டை ஆலைகள், சிப்காட் வளாகம் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. இதுகுறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இன்று (அதாவது நேற்று) நடக்கும் வேலை நிறுத்தத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதனால் ரூ.500 கோடி மதிப்பில் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதித்துள்ளது. மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.
பெருந்துறை
இதேபோல் பெருந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட விஜயமங்கலம், கள்ளியம்புதூர், பெரியவீரசங்கிலி, மேட்டுப்புதூர், கராண்டிபாளையம், சீனாபுரம், பாப்பம்பாளையம், திங்களூர் ஆட்டோ லூம்கள் எனப்படும் 3 ஆயிரம் விசைத்தறிகளை இயக்காமல் அதன் உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டதுடன், ஜவுளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
நம்பியூர் பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.