கறவை மாடுகள் வாங்க 20 பேருக்கு ரூ.21 லட்சம் கடனுதவி


கறவை மாடுகள் வாங்க 20 பேருக்கு ரூ.21 லட்சம் கடனுதவி
x

கறவை மாடுகள் வாங்க 20 பேருக்கு ரூ.21 லட்சம் கடனுதவி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

திருப்பத்தூர்

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா, வங்கி கடனுதவி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 304 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கலெக்டரிடம் அளித்த மனுவில், அலசந்தாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றனர். செய்யாத பணிகளை செய்ததாக கூறி ஊராட்சி மன்ற வரவு - செலவு கணக்கு புத்தகத்தில் பொய்யான கணக்குகளை எழுதி பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்குஊராட்சி செயலாளர் உடந்தையாக உள்ளார். எனவே, அலசந்தாபுரம் ஊராட்சியில் ஆய்வு நடத்தி, அங்கு ஆவணங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஆடுகளை கண்டுபிடித்து தர வேண்டும்

திருப்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 60) என்பவர் அளித்த மனுவில், வயிற்று பிழைப்புக்காக 2 ஆடுகள் வளர்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 2 ஆடுகள் திருட்டுப்போனது. ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யாரென்று நானே அடையாளம் கண்டு நாட்டறம்பள்ளி போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் எங்கள் கிராமத்தில் ஆடு திருட்டு அதிகரித்துள்ளது. எனவே ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது ஆடுகளை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

கடனுதவிகள்

நிகழ்ச்சியில் தாட்கோ துறை சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 20 ஆதிதிராவிட பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க தாட்கோ மற்றும் இந்தியன் வங்கி மூலம் ரூ.21 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பெலிக்ஸ் ராஜா, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story