லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

தக்கலை அருகே லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர சோதனை

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் வாகனங்களில் கடத்தப்படுகிறது. அவற்றை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பகுதியில் சென்றபோது, சாலையோரம் சந்தேகப்படும் வகையில் ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. மேலும், லாரியின் வாகன பதிவெண் அழிக்கப்பட்டு இருந்தது.

மூடைகளில் ரேஷன் அரிசி

அதைதொடர்ந்து அருகில் நின்ற நபரை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அதில், அந்த நபர் மார்த்தாண்டத்தை சேர்ந்த மெக்கானிக் என்பதும், லாரி பழுதாகி நிற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழுது நீக்க வந்ததாகவும், ஆனால் டிரைவரை காணவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் லாரியின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது, அதில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அந்த மூடைகளில் விருதுநகர் மாவட்டம் வாணிப கழக ஸ்டிக்கர் இருந்தது. இதனால், ரேஷன் அரிசி வெளிமாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பியோடியது தெரிந்தது.

20 டன் பறிமுதல்

பின்னர், லாரியுடன் மொத்தம் 20 டன் ரேஷன் அரிசியை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் பறிமுதல் செய்தார். இதையடுத்து இதுபற்றி நாகர்கோவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் 20 டன் ரேசன் அரிசியும் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மெக்கானிக்கை அழைத்த போன் நம்பரை வாங்கி லாரியின் டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story